தமிழர்களின் நடுகல் வழிபாடு
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம் எனும் பொருள் பட கனடாவில் பல சைவ ஆலயங்கள் கடந்த முப்பது ஆண்டுகாலத்தில் தமிழர்களினால் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த ஆலயங்களில் நாம் வழிபடும் கடவுள் திருவுருவங்கள் அநீதியை எதிர்த்து நீதிக்காக போராடியதாக உருவகப்படுத்தபடுகிறது. எமது பண்டைய வழிபாட்டு முறைகளும் இயற்கையுடன் சேர்ந்தே இருந்தன. பின்னர் இயற்கை வழிபாடு உருவ வழிபாடாக வளர்ச்சியடைந்து நிலைத்தது. எனினும் பண்டைய நடுகல் வழிபாடு போன்றவையும் பெரும்பாலான மக்களால் பின்பற்றப்பட்டு வந்தன. தமிழர்கள் நாட்டுக்கு உழைத்த, தாம் சார்ந்த மக்களை காக்க போராடி வீழ்ந்த நல்லவர்களை கடவுளாக கண்டதன் வெளிப்பாடே நடுகல் வழிபாடாக கொள்ளலாம். தமிழர்களின் நடுகல் வழிபாடு சங்க காலத்திற்கு அல்லது அதற்கு முன்னர் தொடக்கம் இருந்ததாக அறியப்படுகிறது. இதற்கான சான்றுகள் புறநானூறு சிலப்பதிகாரம் மற்றும் பல தமிழ் இலக்கியங்களில் உள்ளன.
ஈழத்திலும் தமிழகத்திலும் பல கோவில்களில் உருவக வழிபாடாக சூலம், வேல் மற்றும் சிவலிங்க வழிபாட்டு முறைகளும் நெடும் காலமாக உள்ளன. தமிழ் மொழி போலவே, தமிழர்களின் வழிபாட்டு முறைகளும் நீண்ட வரலாற்றையும் மரபையும் கொண்டது. புலம் பெயர் முதல் தலைமுறை ஈழ தமிழர்கள் கனடிய காலநிலைக்கேட்ப சில மாறுதல்களுடன் தாயக கோவில்களை நினைவு கொள்ள கூடிய வகையில் இங்கு பல கோவில்களை அமைத்துள்ளனர். ஒரு குமுகத்தின் விழுமியங்கள் அதன் மொழி, மரபு மற்றும் வழிபாட்டு முறைகளால் பிணைக்கப்பட்டுள்ளது. தமிழர்களின் எதிர்கால தலைமுறைகள் சிறந்திருக்க தமிழ் மொழி மற்றும் வழிபாட்டு முறை பிணைப்பு வேண்டியுள்ளது. ஒரு குமுகத்தின் சிறப்பு அதன் விழுமியங்களை மரபை தொடர்ந்தும் பேணுவதிலேயே தங்கியுள்ளது. ஈழத்தில் தமிழ் இனஅழிப்பில் இருந்து புலம் பெயர்ந்து கனடா வந்த தமிழர்களுக்கு, நமது நாடான கனடா சுதந்திரம், அரவணைப்பு, மற்றும் அதிக வாய்ப்புகளையும் அளித்துள்ளது. தமிழர்கள் கனடாவிற்கு செய்த பங்களிப்புகளை பாராட்டும் வகையில், தமிழ் மரபுதிங்களை மாகான மற்றும் மத்திய கூட்டாட்சி பாராளுமன்றங்களில் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது. இது தமிழர்களின் அடுத்த தலைமுறைக்கு சிறந்த அடித்தளத்தை கொடுத்துள்ளது.
தமிழர் மரபின் அதை பேணுவதில், வழிபாட்டு தலங்களின் பங்களிப்பும் தேவை. தமிழர்களின் வழிபாட்டிடங்கள் நீதி மற்றும் தமிழ் சார்ந்து செயல்பட வேண்டிய தேவைகள் சில உள்ளன. அதில் நடுகல் வழிபாட்டை கோவிலுக்குள் அமைத்து அந்த நடுகல் சார்ந்த வழிபாட்டு முறையை தமிழில் மட்டும் செய்தல் எதிர்காலத்தில் ஒரு அவசியமான செயற்பாடாகும். இதனால் பல நன்மைகள் இனி வரும் தமிழ் சந்ததியினருக்கு கிடைக்கும். கோவிலில் தற்போது இருக்கும் சூரியன், செவ்வாய், வயிரவர், அனுமார், நந்தி போன்ற கடவுளர் போல், ஒரு பொதுவான நடுகல் உருவகம் ஒன்றை அமைப்பதன் மூலம் ஒரு பொதுவான தமிழ் சார்ந்த வழிபாட்டு முறைக்கு வழியமைக்க முடியும்.இந்த பொதுவான நடுகல் வருடந்தின் எல்லா காலங்களிலும் பல பயன்பாடுகளை கொண்டதாகவும் அமையும். ஈழ விடுதலை போராட்டத்தில் இனஅழிப்பை எதிர்த்து போராடி வீழ்ந்த புனிதர்களின் கல்லறைகளும் நடுகற்களும் கடந்த பலவருடங்களாக அகற்ற பட்டுள்ளன. இவர்களை வணங்கவும் இந்த நடுகல் வழிவகுக்கும்.
கனடாவில் உள்ள பல தமிழர்களின் உறவினர்கள் நண்பர்கள் மக்களுக்கு அரிய சேவைகளை வழங்கி சிவபதம் எய்தியுளனர், அவர்களை வணங்கவும் இந்த நடுகல் உதவும். தமிழ் சித்தர்கள், ஞானிகள், தேவாரம் பாடிய நாயன்மார்களையும் வணங்க இந்த நடுகல் வாய்ப்பு வழங்கும். எமது முன்னோர்களை வணங்க கூட இது வழிசமைக்கும். கோவிலில் ஒரு மூலையில் அமைக்கும் நடுகல் எதிர்காலத்தில் தமிழ் சைவம் தமிழர் மரபு என்ற பிணைப்பை மேலும் இறுக செய்து நீண்ட காலம் நிலைக்க வழிசமைக்கும். தற்கால கோவில் வழிபாட்டு முறைக்கு எந்த பங்கமும் வாராமல், தனியாக இதற்கான அமைப்பு முறைகளை கூட தமிழில் ஏற்படுத்த முடியும். கனடிய தமிழர்களான எமது எதிர்கால சந்ததியினர் மேலும் சிறந்த பங்களிப்பை கனடாவிற்கு அளிக்க இந்த இலகுவான வழிபாட்டு முறை வழிகோலும். தமிழ் சார்ந்த வழிபாட்டு முறைகளை இந்த நடுகல் வழிபாட்டுடன் இணைத்து செய்வதன் மூலம், அதிக தமிழ் மக்களை எதிர்காலத்தில் கோவில் செயட்பாடுகளில் ஈடுபாடு கொள்ளவும் இது வழிசமைக்கும். அத்துடன் தமிழும் சைவமும் தமிழர் மரபும் இணைந்து நீண்டு நிலைக்கும்.
அன்பே சிவம்,
வேல்