சீனா கொல்லையில் நின்றாலும் தமிழர் வரலாற்றை அழிக்க முனைப்பெடுக்கும் இந்தியா
உலக திரைத்துறையின் மையமாக அமெரிக்காவின் Hollywood உள்ளது. எழுபது வருடங்களை கடந்தும் இன்றும் கூட யூதஇன அழிவை சொல்லும் திரைப்படங்கள் வந்தவண்ணம் தான் உள்ளன. இரண்டாம் உலக போரின் திரைப்படங்கள் குறிப்பாக நேச நாடுகளின் தரையிறக்கம் தழுவிய படங்கள் இன்றும் வருகின்றன. பல நாடுகள் சேர்ந்து செய்த D-Day எனப்படும் Normandy தரையிறக்கம் என்பதிலும் வியப்பானது தான் தமிழீழ அரச படைகள் சிறிலங்காவின் ஆக்கிரப்பின் மீது செய்த குடாரப்பு தரையிறக்கம். தமிழருக்கு தியாகத்தில் காந்தியிலும் மேலானவர் தான் திலீபன். கலை, போரியல், நிர்வாகம் அரசியல் என்று எல்லாவற்றிலும் சிறந்து விளங்கிய புலிகள் ஆயிரம் எதிர்ப்பு இருந்தாலும் அவர்கள் அமைத்த மக்கள் ஆணை பெற்ற தமிழீழம் இந்தியாவுக்கும் அரணாக தான் இருந்தது. அதன் வரலாறு உலகில் எந்த வரலாற்றுக்கும் சற்றும் சளைத்தது இல்லை. சிறிலங்காவின் தமிழின அழிப்பில் இந்தியாவிற்கும் பெரும் பங்குண்டு. தமிழீழம் 2009 இல் வீழ்ந்து போயிற்று அதற்கு இந்தியாவின் தமிழின எதிர்ப்பு கொள்கையும் காரணம். இந்தியா தமிழீழ வரலாற்றையும் சேர்த்து அழிக்க தான் இன்றும் முனைப்பாய் உள்ளது. இந்தியாவின் புலிகளின் தடை நீடிப்பும் இந்த வரலாற்று அழிப்பு நோக்கையும் கொண்டது.
வரலாற்றில் சீனா சிறப்பான நாடு ஆனால் ஒரு காலத்தில் பஞ்சம் பட்டினி என்று மீளவே முடியாத நிலையில் இருந்து இன்று மீண்டும் உலக முன்னிலைக்கு வந்துள்ளது. தமது பெருமைகொள் வரலாற்றை தெரிந்தால் தான் ஒரு இனமோ நாடோ மேன்மை பெறும். அதற்கு திரைகலையும் ஒரு வழி. ஆனால் தமிழர்களின் தற்கால திரைகலை குப்பைகள் நிறைந்த இடமாக தான் உள்ளது. தமிழீழ நாட்டின் அழிப்பையும் அதை தொடர்ந்த தமிழின அழிப்பையும் செய்தபடி தமிழர்களை ஒரு தோல்வி நிலையில் அழுத்தி புலிகள் மேல் எல்லா பழியையும் போட்டு வரலாற்றை திரிப்பதை தான் இந்தியா விரும்பியது. இதற்காக தமிழரின் புலிகளின் பின்னரான பலவீனமான அரசியலையும் பயன்படுத்தியது. சீனா இந்தியாவை இறுக்கும் இன்றைய நிலையிலும் புலம்பெயர் தமிழர்களையும் குறிவைத்து இந்தியா தமிழர் இழிவு நிகழ்ச்சி நிரலை செய்வது சீனாவிடம் தோற்றாலும் பரவாயில்லை தமிழரை உய்ய விடமாடடோம் என்பதாக தான் உள்ளது.
தமிழர் வரலாற்றை சொல்ல தமிழ் நாடு மற்றும் ஈழ கலைஞர்களுக்கு நெருக்கடிகள் பல. அநேகமான புலம்பெயர் தமிழ் திரைத்துறையினர் தமது பெயருக்கு விருது வாங்க மற்றும் தமது அடுத்த படத்திற்கு எப்படி மானியம் பெறலாம் என்பதிலேயே குறியாயுள்ளனர். இதனால் புலம் பெயர் தமிழர்களின் படங்கள் என்றாலே மக்கள் பார்ப்பதும் இல்லை. ஒரு சில தரமான படைப்புகளை திரைக்கு எடுத்து வந்தாலும் தமிழர்களுக்கு திரை தரம் தமிழர் சார் வரலாற்று நிலை தெரியாத வகையில் ஒரு இரைச்சல் உள்ள நிலையில் புலம்பெயர் தமிழ் திரைத்துறை உள்ளது பரிதாபத்திற்கு உரியது. இந்த நிலையில் எதிர்காலத்தில் தமிழர் தரப்பிலிருந்து வரலாற்றை எப்படி சொல்வது என்ற கேள்வி எழுகிறது. அதற்கு விடை காண முயற்சிப்பதே இந்த கட்டுரையின் நோக்கம்.
தமிழர்களின் வரலாற்றை மறைப்பதில் இந்தியாவின் பங்கு பல இடங்களில் உள்ளது. இதை தமிழர்கள் தான் இனி ஆய்வுகள் செய்து உறுதிப்படுத்த வேண்டும். இந்தியாவின் தமிழர் எதிர்ப்பு கொள்கையால் தமிழர்களின் வரலாறு சொல்லும் திரைப்படங்கள் முடக்கப்படுகின்றன. மாறாக இந்தியா தமிழர்களை கொள்ளை கூட்டமாக சித்தரிக்கும் படங்களை தூண்டுகின்றது. நூறு வருட அனுபவம் உள்ள தமிழ்நாடு திரைதுறையால் இந்தியாயாவை தாண்டி படம் எடுக்க முடியாது. பாரிய முதலீடுகளை செய்து படத்தை எடுத்த பின்னர் இந்தியா முடக்கி விடும் என்ற பயம் அவர்களுக்கு எப்போதும் இருக்கும். புலம்பெயர் தமிழர்கள் இந்தியாவின் ஆதிக்கத்தில் இல்லை அவர்களால் தமிழர் வரலாற்றை படமாக்க முடியும். இருந்தும் பல புலம்பெயர் திரைத்துறையினர் தமக்கும் தமிழருக்கும் சம்பந்தம் இல்லாதது போல திரைப்படவிழாவில் விருது வர தமிழரை கேவலமாக காட்டினாலும் பரவாயில்லை என்ற அளவில் தான் ஒரு சில திரைத்துறையினர் உள்ளனர். ஒரு வருடத்திற்கு குறைந்தது பத்து சிறு படங்களாவது 100K budget இல் செய்கின்றனர். ஆய்வுகள் செய்வதில்லை எதோ தமது கதையை படமாக்கினால் காணும் என்ற எண்ணம் மட்டுமே. இந்த முறையில் ஒரு சிறப்பான படத்தை செய்வது அரிது.
புலிகள் வரலாறும் தமிழீழ வரலாறும் ஒன்று தான். புலிகளை தவிர்த்து தமிழீழ வரலாற்றை சொல்ல முடியாது. ஆனால் இந்தியாவின் எல்லை கடந்த தமிழ் எதிர்ப்பு தான் புலிகள் இல்லாத போதும் அவர்கள் மீது பன்னிரண்டு வருடம் கடந்தும் உள்ள தடை. கடந்த வருடம் ஐக்கிய இராச்சியத்தில் புலிகள் மீதான தடைக்கு எந்த விதமான காரணமும் இல்லை. ஆதனால் நீக்க வேண்டும் என நீதித்துறை அந்த அரசுக்கு தெரிவித்திருந்தது. உடனடியாக இந்திய அரசுசார் பத்திரிகைகள் தான் அதற்கு எதிர்ப்பும் தெரிவித்தன. தமிழீழ வரலாற்றை முடக்க இந்தியா தான் இன்றும் முனைப்பாக உள்ளது. புலம்பெயர் தமிழருக்கு சுதந்திரம் இருந்தாலும் புலிகளின் தடை இன்றும் உள்ளதால் பெரிய நிதிச்செலவில் திரைப்படங்களை மேற்கொள்ள தயாரிப்பாளர்கள் பின்னற்பர். இதை மேவி தமிழீழ வரலாற்று திரைப்படங்களை எடுப்பது கடினம் தான். ஆனால் வழிகள் உண்டு. கூட்டு முயட்சி தான் அந்த வழி.
கடந்த இரு வருடத்தில் பொய்யாவிளக்கு (The Lamp of Truth) மற்றும் சினம்கொள் என்று இரு படங்கள் வந்தன. சினம்கொள் தமிழீழ போராளி ஒருவரின் 2017 கால பகுதியில் முடிந்த வரை வரலாற்று விழுமியங்களை சொல்லும் படும். கடின முயட்சியில் பல தடைகளை தாண்டி ஈழத்திலேயே படமாக்கிய சிறந்த திரைப்படம். பொய்யாவிளக்கும் தமிழின அழிப்பை சொல்லும் தமிழ் நாட்டில் பல சிரமங்களை தாண்டி எடுக்க பட்ட திரைப்படம். இந்த இரு படங்களும் தமிழீழ வரலாறு சார் படங்களில் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு படியாக உள்ளபடங்கள். மேதகு எனும் தமிழர் தலைவர் பிரபாகரனின் ஆரம்ப கால வரலாறு சொல்லும் திரைப்படமும் இந்த வாரம் பல சிரமங்களை தாண்டி இணையவெளியூடாக மக்களிடம் வருகிறது. திலீபன் எனும் படம் சிறந்த முறையில் இருந்தபோதும் இன்னமும் வெளிவரவில்லை. இந்த படங்களை தயாரிப்பதற்கு பெரும் நிதி இழப்புகளை எதிர்பார்த்து தான் தயாரிப்பாளர்கள் முயற்சிக்க வேண்டி உள்ளது. நிதி இழப்பு வாய்ப்பு மிக அதிகம் என்பதால் வியாபார ரீதியில் தயாரிப்பாளர்கள் வரமாட்டார்கள். இப்படியான தயாரிப்புக்கு பின்னிற்கும் பல தயாரிப்பாளர்கள் தமிழர் சில பொழுதுபோக்கு சராசரி படங்களை எடுத்து முழுமையாக தமது பணத்தை இழந்துள்ளனர்.
பொய்யாவிளக்கு திரைப்படம் வெண்சங்கு கலைக்கூடத்தினால் இருபதிற்கு மேற்பட்டவர்கள் இணைந்து கனேடிய கூட்டுதாபனமாக எடுக்கப்பட்ட திரைப்படம். மேதகு மக்கள் நிதிநல்கை (Crowdfunding) மூலமும் தயாரிக்க பட்ட திரைப்படம். இன்றையநிலையில் பலர்சேர்ந்து தயாரிப்பாளராக இருப்பது தான் சிறந்தது. நிதி இழப்பு வரும் போது ஓரிருவரை தாக்காது அதே நேரம் தரமான மக்கள் சார் படைப்பாகவும் அது இருக்கும். திரைப்படம் இயக்குனரின் முழு ஆளுகைக்குள் செய்வது தான் தமிழ்நாட்டு திரையுலகின் வழக்கம். பலர் தயாரிப்பாளராக இருந்தால் பல சிரமங்கள் இருக்க தான் செய்யும். ஆனால் அதில் நன்மையையும் உள்ளது. பல தயாரிப்பாளர்கள் கூட்டாக இயங்கும் பொது திரைக்கதையை தனியாக பெற்று அதை தயாரிக்கும் பொறுப்பை வேறு திரைக்குழுவை அமைத்து ஒரு இயக்குனரை பணிக்கு அமர்த்தி திரைப்படத்தை தயாரிக்க முடியும். நீண்ட காலம் எடுத்து முழுமையாக திட்டமிட்டு தயாரிப்பாளர்கள் இயங்கினால் எதிர்காலத்தில் தமிழீழ வரலாற்றை புலம்பெயர் தமிழர்கள் திரைப்படமாக எடுப்பது மிக சாத்தியமானதொன்று. பல திரைப்படங்களை நடுத்தர budget இல் IMDB மற்றும் திரை பட தகவல் தளங்களில் கொண்டுவருவதன் மூலம் எதிர்காலத்தில் தமிழரை இழிவு செய்யும் திரைப்படங்கள் வருவதையும் தடுக்க முடியும். புலம்பெயர் தமிழர் ஒன்றியங்களும் மற்றும் தமிழ் உணர்வாளர்களும் தமிழர் வரலாறு சார் நல்ல படங்கள் வரும்போது, அதன் ஒரு சில விநியோகத்தை ஆவது பொறுப்பெடுத்து திரையரங்குகளில் வெளியிட்டு ஊக்கப்படுத்தினால் எதிர்காலத்தில் தமிழர் தரப்பில் இருந்து தமிழர் வரலாறு சொல்லும் படங்கள் வருடத்திற்கு ஒன்றேனும் வரும்.
- — வேல்