இனஅழிப்பு செய்யும் சிறிலங்காவுக்கு கடன் கொடுப்போரிடம் தமிழர்களின் கேள்வியும் கோரிக்கையும்
சிறிலங்காவின் இன்றைய வங்குரோத்து நிலை அதன் கடந்த பல தசாப்த தமிழின அழிப்பின் ஒரு விளைவாகும். ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான இறையாண்மையுடன் தெளிவாக எல்லைகள் வரையறுத்த தமிழீழ நிலப்பரப்பில் வாழ்ந்த தமிழினத்தின் இருப்பை அழிப்பதற்கான செயல்பாடுகளுக்கு சிறிலங்கா கடந்த 70 வருடங்களில் கடன் வாங்கி செலவு செய்த விளைவு தான் இன்றைய அதன் வங்குரோத்து நிலை. சிறிலங்கா இனஅழிப்பு அரசை பொருளாதார அழிவில் இருந்து மீட்க அதன் அரசு உலக வங்கி, சர்வதேச நாணய நிதியத்தை அணுகியுள்ளது. உலகநாடுகளிடம் கையேந்தி உள்ள சிறிலங்காவுக்கு உதவ முன்னர் உலக நாடுகளுக்கும் நிதி வழங்கும் அமைப்புகளுக்கும் நிபந்தனைகளாக தமிழருக்கான இனஅழிப்பு பரிகார நீதியையும் இறையாண்மையுடன் கூட்டாச்சி அல்லது தனிநாடு தீர்வையும் வழங்க வேண்டும் எனும் கோரிக்கைகளை முறையே நிலத்திலும் புலத்திலும் தமிழர்கள் முன்வைக்கிறார்கள்.
அமெரிக்க தமிழ் அமைப்புகள் முன்நிபந்தனை போட வேண்டும் என்ற கோரிக்கைகளை உலக வங்கி, சர்வதேச நாணய நிதியத்திற்கு முன்வைத்துள்ளன. கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரியின் இன்றைய அறிக்கையில் சிறிலங்காவின் இராணுவம் தமிழின அழிப்பை மேற்கொள்ளவும் நிதி பயன்படுத்த படுகின்றது என்பதை சுட்டிக்காட்டியுள்ளார். அவரின் அறிக்கையில் மேலும் சிறிலங்காவின் இராணுவத்தை குறைக்கும் மற்றும் ஐநாவின் தீர்மானத்தின் படி சிறிலங்காவின் இராணுவத்தை உலக நீதியரங்கில் குற்றவாளி கூட்டில் நிறுத்த வேண்டும் போன்ற முன்னிபந்தனையை வைக்குமாறு கோரியுள்ளார்.
அமெரிக்க தமிழ் அமைப்புகளின் கடிதத்தில் விபரங்களை கீழுள்ள இணைப்பில் காணலாம். https://rgtf.org/tamil-american-organizations-write-to-imf-on-aid-to-sri-lanka/ அக் கடிதத்தில் சிறிலங்கா ஐநாவின் நீதி பொறிமுறை தீர்மானங்களை புறம்தள்ளுவதை சுட்டிக்காட்டி சிறிலங்காவின் இனஅழிப்பு மற்றும் போர்க்குற்றவாளிகள் மேல் சர்வதேச வழக்கு தொடர ரோம் சாசனத்தில் இணைவதை முன்நிபந்தனையாக கொள்ளுமாறு கூறப்படுகிறது. அத்துடன் சிறிலங்காவின் பல சட்டங்கள் சர்வதேச முறைகளை புறக்கணித்து தமிழரை இனஅழிப்பு செய்யும் நோக்குடன் உள்ளதை குறித்து காட்டியுள்ளது. இக்கடிதத்தை வட அமெரிக்க தமிழ் சங்க பேரவை மற்றும் நாற்பது வருடகாலத்திற்கு மேல் அமெரிக்காவில் இயங்கி வரும் இலங்கை தமிழ் சங்கத்துடன் ஆறு தமிழ் அமைப்புகள் சர்வதேச நாணய நிதியத்திற்கு அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒரு மில்லியன் ஈழ தமிழர்கள் புலம்பெயர்ந்து அதில் அநேகர் மேற்குலகில் வாழ்ந்தாலும், அவர்களின் குரல்களுக்கு 2009 இலும் உலகம் செவிசாய்க்கவில்லை. 2010 இல் சனநாயக வாக்கெடுப்பு மூலம் தமது முடிவு 1976/77 தமிழீழம் தனிநாடு என்ற வட்டுக்கோட்டை தீர்மானத்தை மீளவும் உரத்து கூறிய போதும் உலகம் செவிசாய்க்கவில்லை. உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் 2009 இல் தமிழீழ நாட்டை அழிப்பதில் எத்தனை தமிழர்கள் கொல்லப்பட்டாலும் கவலை இல்லை என்ற தமிழின அழிப்பை ஊக்குவிக்கும் நிலைப்பாட்டை எடுத்ததை அமெரிக்க அரசு செயலாளர் கிலறி கிளிண்டனின் மின்னஞ்சல் கசிவில் தெளிவாக கூறப்பட்டு இருந்தது. இன்றும் கூட தமிழர்களின் குரல்களை செவிசாய்க்கும் நிலையில் மேட்குலக நிதி நிறுவனங்கள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் தமிழர்களின் நீதிக்கான தேடலும் சர்வதேச சட்டங்களை சிறிலங்காவின் மேல் ஒவ்வொரு இடத்திலும் பயன்படுத்தும் செயல்பாடுகளும் இனி கூடுமே அன்றி குறையாது.
சிறிலங்காவின் தமிழ் நிலங்களை அபகரிக்கும் தொடர்ச்சியான இனஅழிப்பு செயல்பாடும் சிங்கள புத்த மத வெறியும் தமிழர்களை தனி நாடு கோரி அல்லது இந்தியாவின் பாதுகாப்பு அரணாக தான் மேலும் நெருக்கும். புலம் பெயர் தமிழர்கள் தமது எதிர்கால வளங்களை தமிழீழம் தனிநாடாக போவதற்கு ஏதுவான நிலையை தோற்று விக்க தான் பயன்படுத்துவரே அன்றி சிறிலங்காவின் ஒற்றையாட்சிக்குள் தமிழரை இழப்பதற்காக அல்ல. இவற்றையும் மீறி சிறிலங்காவுக்கு கடன் கொடுப்பவர்கள் தமிழர்களின் எதிர்ப்பையும் பொருள் இழப்பையும் தான் எதிர்காலத்தில் சம்பாதிப்பர். சிங்கள மக்கள் கூட தமிழருக்கான நாட்டை 2009 இல் அழிக்காமல் கொடுத்திருந்தால் தாமும் இன்று அல்லல் பட வேண்டியதில்லை என்ற நிலையில் தான் உள்ளனர்.
- வேல்