தமிழ் சமூக மையம் (TCC) கனேடியத் தமிழர்களின் பெருமையாக அமையும்
முதலாம் தலைமுறைக் கனடியத் தமிழர்கள் தமது சமூகத்தை மேம்படுத்திய அதே நேரம் கனேடிய நாட்டிற்கும் பெரும் பங்களித்து, முழுவிசுவாசத்துடன் தமது கடும் உழைப்பைப் பலவழிகளிலும் வழங்கியிருந்தனர். பல வல்லரசுகளின் சதி வலைகளையும் மீறித் தமிழ் மக்களின் இறைமை காக்கத் தமிழீழத்திற்காகப் போராடிய தலைமுறையினரின் ஒரு பகுதியினரே, போரின் வடுக்களுடன் புலம் பெயர்ந்த கனேடியத் தமிழர்கள். 2009 இல் பாரிய தமிழின அழிப்பைத் தமிழீழம் சந்தித்த பின்னர், தொடரும் தமிழர்களின் நீதிக்கான பயணத்தில் கனடியத் தமிழர்களும் பெரும் பங்காற்றி வருகின்றனர்.
தமிழர்களின் அடையாளங்கள் சிறிலங்கா இனவாத அரசினால் தொடர்ந்தும் அழிக்கப்பட்டு வருவதை உணர்ந்த புலம்பெயர் தமிழர்கள், தமது அடையாளங்களைப் புலம் பெயர் மண்ணில் பாதுகாக்கும் முனைப்பில் ஓர்மத்துடன் செயலாற்றுவது, பாராட்டத்தக்கதே.
தமிழர்கள் சிறிலங்காவின் தமிழின அழிப்பில் இருந்து தப்பி, ஏதிலிகளாகக் கனடாவிற்கு வரத் தொடங்கி ஐம்பது வருடங்கள் ஆகிவிட்டது.
பொருளாதார அரசியல் ரீதியாகத் தம்மைச் செழுமைப்படுத்திக்கொண்ட கனடியத் தமிழர்கள், தாயகதில் வாழும் உறவுகளுக்கு உதவியவண்ணம், அவர்களின் நீதிக்கான குரலாகத் தொடர்ந்தும் ஒற்றுமையுடன் செய்லாற்றி வருகிறார்கள். கனடாவின் பல பகுதிகளிலும் வாழ்ந்தாலும், GTA என்று அழைக்கப்படும் ரொரோண்டோ பெருநகரில் பெருமளவிலான தமிழர்கள் வாழ்கிறார்கள். கல்வி, வணிகம் என்று தாம் தேர்ந்தெடுத்த பாதையில் மிகவும் முன்னேறிய சமூகமாகக் கனடியத் தமிழர்கள் இருப்பதுவும், கனடிய மண்ணில் அவர்களின் கடினமான உழைப்பினாலும், தமிழர்களுக்கான அங்கீகாரத்தினைக் கனடிய அரசு தொடர்ந்து வழங்கி வருகிறது.
“தமிழ் மரபுத்திங்கள்”, “தமிழின அழிப்பு நினைவு நாள்”, “தமிழின அழிப்பு நினைவுக் கல்வி வாரம்” போன்ற சட்டங்கள் மற்றும் பிரேரணைகளை நிறைவேற்றிக் கனடியத் தமிழர்களுக்கான அங்கீகாரங்களைக் கனடிய அரசு முறையாகச் செயல்படுத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாகவே, தற்போது அமையவிருக்கும் “தமிழ் சமூக மையம்”, எதிர்காலச் சந்ததியினருக்கான ஒரு பெரும்தளமாகவும் அவர்களின் ஒரு முக்கிய அடையாளமாகவும் திகழப்போகின்றது.
இந்த வருடம் (2025) பிராம்டன் நகரில் அமையவிருக்கும் தமிழின அழிப்பு நினைவுத் தூபியும் டொரோண்டோவில் இனி அமைய இருக்கும் சமூக மையமும் கனடிய தமிழர்களின் வரலாற்றுப் பயணத்தில் மிக முக்கிய அடிக்கற்கள். ஐம்பது மில்லியன் கனடிய டொலர்களுக்கு மேலான செலவுடன் கட்டப்படவிருக்கும் கனடிய சமூக மையத்தில்
தமிழ், தமிழீழ வரலாறு மற்றும் தமிழின அழிப்பின் ஆதாரங்களின் காட்சிப்படுத்தல், தமிழர் பண்பாட்டு அரங்கம், மற்றும் எல்லா கனேடியர்களும் பயன்படுத்த கூடிய பொழுதுபோக்கு அம்சங்கள் என்று பல்வேறுபட்ட பயன்பாடுகளைக் கொண்டிருக்கப் போகின்றது. 75% ற்கு மேலான கனடிய மாகாண மற்றும் கூட்டு அரசு நிதி ஆதரவில் அமையவிருக்கும் தமிழ் சமூக மையம் கனேடிய தமிழர்கள் மட்டுமன்றி உலகெங்கும் பறந்து வாழும் புலம் பெயர் தமிழர்களுக்கும் எதிர்காலத்தில் ஒரு இணைப்பு பாலமாகவும் விளங்கும். இந்தப் பாரிய பணி விரைவில் நிறைவு பெறத் தமிழர்கள் தமது பங்களிப்பை வழங்குவது ஒரு வரலாற்றுத் தேவை.
வேல்