கனேடிய பாராளுமன்றில் தமிழின அழிப்பு நினைவு நாள் — 2024
தமிழின அழிப்பு நினைவு நாள் நிகழ்வு May 7, 2024 கனேடிய பாராளுமன்ற வளாகத்தில் மிகவும் உணர்வுபூர்வமான முறையில் நினைவுகூரப்பட்டது.
கியூபெக் தமிழ் சமூக மையம் மற்றும் கனேடிய தமிழ் அமைப்புகள் சேர்ந்து அமைச்சரும், ஸ்காபுரோ தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான திரு ஹரி ஆனந்தசங்கரி அவர்களின் அனுசரணையில்
நடைபெற்ற இன்நிகழ்வில் பல கனேடிய அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் தலைவர்கள், தமிழ் உணர்வாளர்கள் என பலரும் பங்குபற்றினர்.
தமிழின அழிப்பு நினைவு நாளாக (Tamil Genocide Remembrance Day) May18 கனேடிய பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டு இரண்டாவது வருடமாகவும் 2009 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 15 வருட வலிமிகுந்த நினைவுநாளை ஒட்டி இந் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மாலை 5.30 மணிக்கு நிகழ்வு மண்டபத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கு நிகழ்வில் கலந்துகொண்ட பெருந்திரளானோர் ஒவ்வொருவராக மலர்வணக்கம் வணக்கம் செலுத்திய பின்னர் அகவணக்கத்துடன் ஆரம்பமாகிய இந்த நிகழ்வில் நினைவுப் பேருரையை முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் இருந்து மயிரிழையில் உயிர்தப்பித்து இன்றைய வாழும் சாட்சியங்களில் ஒருவரான திரு.பிரணவன் அவர்கள் நிகழ்த்தினார்.
உணர்வுபூர்வமாக தளதளத்த குரலில் தன் கண்முன்னே நடந்த இனப்படுகொலையின் அழியா நினைவுகளை அவர் மீட்டிய போது அரங்கமே அமைதியாக கண்கலங்கி நின்றது. தொடர்ந்து கனேடிய அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் சிறப்புரை ஆற்றினர்.
பாராளுமன்ற உறுப்பினர் Annie Koutrakis தனது உரையில் இன்று கனேடிய பாராளுமன்றத்தில் தமிழ் இனப்படுகொலை நாளை ஒட்டி தான் உரையாற்றியது பற்றியும் தொடர்ச்சியாக நீதிவேண்டிய பயணத்தின் தனது ஆதரவு தொடரும் என்பதையும் உறுதிபடத் தெரிவித்திருந்தார். தொடர்ந்து Quebec மாகாணத்தின் Lac St Jean தொகுதியின் Bloc Québécois கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் Alexis Brunelle-Duceppe, கனேடிய கன்சர்வேட்டிவ் கட்சியின் Sherwood Park Fort, Saskatchewan தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் Garnet Genius அவர்கள் பழமைவாத கட்சியின் சார்பின் சிறப்புரை ஆற்றினர்.இனப்படுகொலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தில் இருந்து வந்தவன் என்ற வகையில் அதன் வலியினை அறிந்தவன் என்ற வகையில் இனப்படு கொலையினால் பாதிக்கபட்ட மக்களுக்காக தொடர்ந்து நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து நாங்கள் பாடுபடுவோம் அத்தோடு கனடிய அரசு தொடர்ந்து சர்வதேச நாடுகளின் உதவியுடன்
நீதி விசாரணை கொடுப்பதுக்கான அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் அத்துடன் தமிழ் இனப்படு கொலையினை புரிந்தவர்கள் மீது கடுமையான தடைகளை மேலும் விதிக்கவேண்டும் என்று தெரிவித்தார்.
தொடர்சியாக கனேடிய பெண்கள் விவகார அமைச்சர் கௌரவ Marci Len அவர்கள் உரையாற்றினார். 2004 சுனாமிக்குப் பின்னரான காலப்பகுதியில் தான் இலங்கையின் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பணியாற்றிய காலத்திலேயே தமிழ் மக்கள் படும் அவலங்களை தான் அனுபவ ரீதியாக பலர் சொல்லக்கேட்டு அறிந்திருந்ததாகவும் இன்றுவரை இந்த அவலம் தொடர்வது வேதனைக்குரியது என்பதையும் கவலையுடன் பகிர்ந்துகொண்டதுடன் நீதிக்கான பயணத்தில் தனது ஆதரவையும் வெளிப்படுத்தினார்.
கனேடிய வெளிவிவகார அமைச்சர் கௌரவ Mélanie Joly மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் Sameer Zuberi, Tim Louis, Leah Taylor Roy ஆகியோரும் மற்றும் பல ராஜதந்திரிகளும்( Diplomats) பாதுகாப்பு துறை அதிகாரிகளும் கலந்துகொண்டமை சிறப்பம்சமாகும்.
கனடிய தமிழ் அமைப்புகள் சார்பில் பேசிய பேச்சாளர்கள் நீதிக்கான முயட்சிகள் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் வேண்டும் சர்வதேச நீதிமன்றில் சிறிலங்காவை இனஅழிப்பு குற்றத்திற்காக நிறுத்தவேண்டிய அவசியம் பற்றியும் வலியுறுத்தினர்.
ஈழத் தமிழ் மக்களுக்கு நடந்த அநீதிகளுக்காக சர்வதேச நீதியை பெற்றுக்கொடுத்து இனப்படுகொலையை அரங்கேற்றிய இலங்கையின் அரச தலைவர்களை பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்த கனேடிய அரசாங்கம் தொடர்ச்சியாக கொடுத்துவரும் ஆதரவும் திரு ஹரி ஆனந்தசங்கரி அவர்களின் தமிழ் இனப்படுகொலை நினைவு நாள் பிரேரணை உள்ளிட்ட பல்வேறு அர்ப்பணிப்பான சேவைகள் ஈழத்தமிழ் உணர்வாளர்களின் உரைகளில் நன்றியுடன் நினைவுகூரப்பட்டது. நிகழ்வின் இறுதியில் கௌரவ அமைச்சர் திரு ஹரி ஆனந்தசங்கரி அவர்களின் உரை இடம்பெற்றது. தமிழ் இனப்படுகொலைகளின் பொறுப்புக்கூறலுக்கும் நீதிக்குமான பயணத்தில் தனதும் கனேடிய அரசினதும் பற்றுறுதியை மீள உறுதிப்படுத்துவதாக அவரது உரை அமைந்தது. கனடிய தமிழ் அமைப்புகளான Quebec Tamil community Centre , NCCT, Ottawa Tamil Association, TGTE ,Quebec Tamil women’s Association மற்றும் நிகழ்வுக்கு ஆதரவு அளித்த ஏனைய தமிழ் அமைப்புகளுக்கும் அமைச்சர் நன்றி தெரிவித்தார்.
மேற்படி அனைத்து நிகழ்வுகளையும் Tamil Association of Mcgill தமிழ் மாணவர் ஒன்றிய தலைவர் ஒருவரான ஆகாஷ் சசிதரன் அவர்கள் தொகுத்து வழங்கியிருந்தார்.
திரு அமரதாஸ் அவர்களின் ஆவணப்படுத்தல்களிஸ் இருந்து முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் சுவடுகளை பறைசாற்றும் கருத்தாளம் மிக்க புகைப்படங்கள் நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
ஒவ்வொரு படமும் ஓராயிரம் உணர்வுகளை பறைசாற்றும் வகையில் அமைந்திருந்தமை நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கு முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் வலிகளை உணர்ந்துகொள்வதில் பெரும்பங்கு ஆற்றியது.
நிகழ்வின் இறுதியில் முள்ளிய்வாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் இறுதிநாட்களின் நினைவலைகள் உணர்வுபூர்வமாக அனுட்டிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் ரொரோண்டோ, மொன்றியல் உள்ளிட்ட கனடாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தமிழ் உணர்வாளர்களும் தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
கலந்துகொண்டவர்கள் அரசியல் தலைவர்களுக்கிடையிலான தொடர்பாடல்களோடு மாலை 7 மணியளவில் தமிழ் இனப்படுகொலை நினைவுநாள் நிகழ்வுகள் நிறைவுக்கு வந்தன.
இந்த நிகழ்வின் மற்றொரு சிறப்பம்சமாக முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் இருந்து மயிரிழையில் உயிர்தப்பித்து இன்றைய வாழும் சாட்சியங்களில் ஒருவரும் புகைப்பட கலைஞருமான அமரதாஸ் அவர்களினால் 2009 நேரடியாக போர்களத்தில் ஒளிப்பதிவு செய்யப்பட்ட புகைப்படங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.
நன்றி — கியூபெக் தமிழ் சமூக மையம்