ஊழி திரைப்படம் தமிழீழ தமிழர் தம் நிலம் மீது கொண்ட பற்றின் ஆழம்
கடந்த ஞாயிறு அன்று ஒட்டாவா திரையரங்கில் ஊழி படைப்பை பார்க்கும் வாய்ப்பு ஒட்டாவா தமிழர்களுக்கு கிடைத்தது. ரஞ்சித் ஜோசெப் எனும் காலம் ஈழ தமிழருக்கு தந்த கலைஞனின் இரண்டாம் படைப்பு இது. சினம்கொள் படத்தின் பின் அவர் மீது நிறைய எதிர்பார்ப்பு இருந்தது. அவருடைய குழுவினரின் கடின உழைப்பு திரையில் ஊழி மூலம் மிக சிறப்பாக பிரதிபலித்தது. இரண்டு மணி நேரத்தில் சராசரி தமிழீழ தமிழரின் தொடரும் நிலத்திற்கான போராட்டங்களை, அன்றாட வாழ்வியலை, சிறிலங்கா அரசால் காணாமல் ஆக்கப்பட்ட தமிழருக்கான நீதி வேண்டி போறாடும் தாய்மார்களின் பயணத்தை திரையில் கொண்டு வருவது இலகுவான விடயம் அல்ல. மிக ஆழமான அறிவும் மக்களுடனும் நெருங்கி செயலாற்றும் பணிவும், சகல வல்லமை பொருந்திய அரசுகளுக்கும் எதிரான தோற்ப்பாடு கொண்ட உண்மைகளை கலை மூலம் கொண்டு வரும் துணிவும் இருந்தால் மட்டுமே இத்தகைய படங்களை திரைக்கு எடுத்து வருவது சாத்தியம்.
எல்லா நடிகர்களும் மிக இயல்பான ஈழ தமிழில் உரையாடி, படத்தின் திரைக்கதையுடன் ஒட்டி சிறப்பாக தமது திறமைகளை வெளிப்படுத்தி உள்ளனர். நாடக பாணி தெரியவில்லை, திரையில் சிறுவர் முதல், இளைஞர், முதியோர் என்று உள்ளூரில் உள்ள எல்லாரையும் தேர்ந்த நடிகர்கள் போல திரையில் கொண்டு வந்தது திரைகுழுவின் கடின உழைப்பிற்கு சான்று பகிர்கின்றது. இயற்கை அழகை அதன் இயல்பு மாறாது திரையில் பதிக்கும் ஆற்றலை ரஞ்சித் மீண்டும் நிரூபித்துள்ளார். வழக்கறிஞர் சுபாஸ் ஒரு சிறந்த பல்முக ஆளுமை என்பதை திரையில் தமது இயல்பான நடிப்பில் கொண்டு வருகிறார். சுற்றி வர சிறிலங்கா அரசால் குடியமர்த்தப்பட்ட சிங்கள குடியிருப்புகளுக்கு மத்தியில் வாழும் தமிழ் கிராமத்தின் வலிகளை கொண்டு வரும் அதே நேரம், இயல்பான நகைச்சுவை உணர்வையும் அவர் கைவிடவில்லை. மொத்தத்தில் படத்தின் பாத்திரங்கள் பல இயல்பாக மனதில் நிற்கின்றன. தொக்கி நிற்கும் எதிர்கால கேள்விகள் பலவற்றையும் படம் மூளையில் பதித்து செல்கின்றது. அதுதான் இயக்குனருக்கு கிடைக்கும் வெற்றியும் கூட.
ஆழ ஊடுருவும் படையில் இருந்த ஒரு சிங்கள இராணுவ வீரனின் மகளின் உண்மையை அறியும் போராட்டத்தையும். அதனூடாக சிங்கள மக்கள் எப்படி தமது அரசால் தமிழருக்கு எதிரான போரை நடத்த ஏமாற்றப்பட்டிருகிறார்கள் என்பதையும் சிறப்பாக படத்தில் கொண்டு வந்திருந்தார்கள். தென் தமிழீழத்தில் தமது நிலத்தை காக்க போராடும் தமிழ் குடுப்பத்தின் வலி தோய்ந்த பயணம். யாழ் நகரில் இளைஞர்கள் சிறிலங்கா அரசு விரித்த போதை வலையின் சிதைவடைவது. கட்டு கோப்பான யாழ் சமுதாயத்தில் சிங்கள ஆக்கிரமிப்பு செய்யும் சிதைவு எல்லாம் சேர்ந்து ஊழி யாக திரையில் காண்பிக்க படுகிறது.
தமிழின அழிப்புக்கு எதிராக போராடி தமிழீழம் என்ற நாட்டை கட்டிஎழுப்பி பின் இந்தியாவினால் பின்னப்பட்ட சர்வதேச சதியில் இறுக்கப்பட்ட போதும், தமது கொள்கைக்காக தமிழீழ மக்கள் மேல் இருந்த ஆறாக் காதலால் தம்மையே அழித்து கொண்டு வரலாற்றை அறத்துடன் சந்தித்த புலிகள் மேல் மக்களுக்கு இருக்கும் மேன்மையான உணர்வுகளை படம் சீராக கோடிட்டு காட்டுகிறது. சுதந்திரம் மறுக்க படும் போது, மக்கள் தமது வரலாற்றை எப்படி காலத்திற்கு காலம் கடத்தி வருகின்றனர் என்பதும் படத்தில் இழையோடி இருக்கிறது. “நாங்கள் எதிரிக்கும் மதிப்பாக நடுகல் வைச்சனாங்கள். உன் வரலாறும் அங்கு தான் உள்ளது” எனும் வரிகளின் கூர்மையில் தெரிகிறது. எந்த பேரசாலும் ஒன்று அல்லது இரண்டு தலைமுறைக்கு தான் வரலாற்றை கட்டுப்படுத்த முடியும், தமிழின அழிப்பை செய்யும்போது வரலாற்றை எப்படி அழிப்பது எனும் திட்டமும் சிறிலங்காவுக்கு பின்னால் இருக்கும் இந்தியா முதல் சில மேற்கு நாடுகளுக்கும் நிச்சயம் இருக்கும். ஆனால் உலகில் பரந்து சிதறி வாழும் ஈழ தமிழினத்தில் இருந்து வரலாற்றை மறைப்பது இந்த நாடுகளுக்கு தான் எதிர்காலத்தில் சிக்கலாக முடியும். நல்ல கலைஞர்கள் கால கண்ணாடிகள், ஊழி தமிழரின் உள்மனதின் ஆழத்தை பிரதிபலிக்கிறது.
புலம்பெயர் தமிழர்கள் சிலரின் பகட்டான எல்லாம் நல்லா இருக்கு வாங்கோ விடுமுறைக்கு ஒருக்கா போவம் எனும் நிலம் காணும் எல்லைகளில் வாழும் மக்களின் வலிகளை உணராத ஈர்ப்பு இயல்பாக திரையில் காணக்கூடியதாக உள்ளது. கடலோடு அமைந்த விடுமுறை வீடுகளில் நடக்கும் காட்சிகள் புலம் பெயர் தமிழர்கள் மிகவும் அந்நியப்பட்டு விட்டனரோ என்ற எண்ணத்தை கொண்டு வருகிறது. ஈழ திரை படங்களுக்கு படம் பார்ப்பவர்களை திருப்திப்படுத்துவதை விட சில கடினமான கேள்விகளை எழுப்பும் கடமையும் உண்டு. புலம் பெயர் தமிழர்களின் மனிதநேய உதவிகளில் இருக்கும் சிக்கல்களையும் படம் தொட்டு செல்கிறது. புலம் பெயர் தமிழ் அமைப்புகள் சில சிறிலங்கா அரச நிரலில் தமிழின அழிப்புக்கு தமிழர் வரலாற்று இழப்புக்கு துணை போகும் காட்சிகள் கனேடிய தமிழ் காங்கிரஸ் இன் அண்மைய தமிழின படுகொலையாளி ராஜபக்சே உடனான சந்திப்பை நினைவு கொள்ள வைக்கிறது. பல கோணங்களில் பல சிக்கலான விடயங்களை கிரகிப்பது கடினம். ஆனால் ஒரு திரை படத்தினூடு பார்க்கும் போது பார்ப்பவருக்கு புரிந்து கொள்வது மிக எளிது. ஊழி படம் தமிழ் கலைஞர்களின் திரை பயணத்தை மேலும் முன்னோக்கி தள்ளி உள்ளது என்பதில் ஐயம் இல்லை.
ஊழி என்பது முழுமையாக அழிவது என்பதின் குறியீடு. இந்த படத்தில் தமிழீழ தமிழரின் நிலம், மரபு, பண்பாடு என்பவை அழிவில் உள்ளது என்பதை காட்டிநிற்கிறது. வெருகல் தமிழரின் நிலைமை யாழுக்கும் வரும் என்பதும் தமிழ் குடும்பம் ஊரை விட்டு வெளியேறும் பொது மலையின் உச்சியில் முருகன் கோவிலில் இருந்து இறங்க அதே பாதையில் பிக்கு மேலேறும் காட்சிப்படுத்தல் சிங்கள பௌத்த ஆக்கிரமிப்பின் தொடர்ச்சியை உணர்த்துகிறது.
ஊழி புலம் பெயர் தமிழர்களுக்கான செய்தியொன்றை இயல்பாக காவி வருகிறது. ஒரு கலையின் சிறப்பு அதன் காலத்தின் தேவையை கூறி நிற்பதில் தான் உள்ளது. பல திரைப்படைப்புகள் பொழுது போக்கு எனும் அளவில் மூளையை களிப்பு நிலையில் கடந்து செல்ல விடும். சில திரைப்படங்கள் கேள்விகளை எழுப்பி சிந்திக்க தூண்டும். மேலும் சில படங்கள் எதிர்காலம் பற்றிய பய உணர்வை உருவாக்கி அழிவை தடுக்க தூண்டும். ஊழி தொடர்கின்ற அழிவை கூறி ஊழி வருகிறது என்பதற்கான கட்டியம் என்று தான் பார்க்க படவேண்டும். இயக்குனர் கேள்வியுடன் விட்டு செல்கிறார். சிறந்த இயக்குனருக்கான தகைமையும் அதுதான்.புலம் பெயர் தமிழர்கள் நிச்சயம் திரையில் பார்க்க வேண்டிய படம். திரையில் பார்க்க முடியாதோர், https://www.eelamplay.com/ இந்த தளத்தில் பார்க்கலாம்.
வேல்